உக்ரேனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் கொடுப்போம்
ரஷ்யா-உக்ரேன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
இதில் உக்ரேனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரேனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.
இதற்கிடையே கிறிஸ்து மஸ் நாளான நேற்று (25) உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரேன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. 52 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் இத்தாக்குதலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
“ உக்ரேனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரேன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரேன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரேனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும்.
உக்ரேனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷ்யாவின் படைகளுக்கு எதிராக, உக்ரேன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.