குளிர்பானத்திற்கு பதிலாக தரையை சுத்தம் செய்யும் திரவத்தை அருந்திய பெண் : புறக்கோட்டையில் சம்பவம்

குளிர்பானத்திற்கு பதிலாக தரையை சுத்தம் செய்யும் திரவத்தை அருந்திய பெண் : புறக்கோட்டையில் சம்பவம்

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

19 வயதுடைய யுவதி ஒருவர் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குக் கடந்த 31 ஆம் திகதி சென்றுள்ளார்.

இதன்போது, இந்த யுவதி குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து, இந்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனையில் இந்த யுவதி குளிர்பானத்துக்கு மாறாகத் தரையைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவம் ஒன்றை அருந்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, யுவதியின் உறவினர்கள் சிலர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில், குறித்த உணவகத்தில் உள்ள பணியாளர் ஒருவர் குளிர்பானத்துக்கு மாறாகத் தவறுதலாகத் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவத்தை யுவதிக்கு கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவங்கள் அடங்கிய போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு டாம் வீதி பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )