இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் வெப்ஸ்டர் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
4 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதற்கமைய 162 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 – 1 எனும் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாயகனாக ஸ்கொட் போலண்ட் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக ஜஸ்பிரிட் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.