‘டிரம்ப்’ குற்றவாளி என தீர்ப்பு

‘டிரம்ப்’ குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தல் போட்டியின்போது அவருடன் இருந்த இரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவர் மீது 34 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மெர்க்கன், ஜூலை 11-ம் திகதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஒரு முன்னாள் ஜனாதிபதி குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )