குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை ; காதலி குற்றவாளி என தீர்ப்பு
குமரி-கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஷாரோன்ராஜ் தனது நண்பர் ஒருவருடன் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் நண்பர் பெண்ணின் வீட்டுக்கு வெளியே நிற்க, ஷாரோன்ராஜ் மட்டும் வீட்டுக்குள் சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.
பின்னர் வெளியே வந்த சிறிது நேரத்தில் ஷாரோன்ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாகவும், தனது காதலி குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் வயிற்றுவலி அதிகமானதால் ஷாரோன்ராஜ் பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாார்.
தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை ஜெயராஜன் பாறசாலை பொலிஸில் கொடுத்த புகாரில், தனது மகனை அவனது காதலியும், பெற்றோரும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என புகார் தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம் குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஜான்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
அதன்படி பொலிஸார் காதலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கிரீஷ்மா, ஷாரோன்ராஜியை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர் இராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கிரீஷ்மாவுக்கு இராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த காதலன் ஷாரோன்ராஜ் அதிர்ச்சி அடைந்து கிரீஷ்மாவிடம் தன்னை ஏமாற்றி விட்டாயே கதறி அழுதுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்பு கொண்டதாக கிரீஷ்மா, ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு இடைஞ்சலாக ஷாரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொன்று விடலாம் என்ற கொடூர எண்ணம் அவருக்கு உருவானது. அதன்படி காதலி அவரை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது பொலிஸ் விசாரணையில் அம்பலமானது.
அதை தொடர்ந்துபொலிஸார் கிரீஷ்மாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அவரது தாய் மற்றும் மாமா ஆகியோரும் கைதாகினர். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற காதலி கிரிஷ்மா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என்று நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.