சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு

மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15ம் திகதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் திகதி ) தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் திகதி நடைபெற்ற பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது.

3 நாட்களுக்குப் பின்னர் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

மறுநாள் (31ம் திகதி ) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. கடந்த 14ம் திகதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்தனர். நேற்று முன்தினத்துடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது.

நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணியளவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அய்யப்ப விக்கிரகத்தில் திருநீறு பூசி அய்யப்பனை தவக்கோலத்தில் இருத்தி கோவில் நடையை சாத்தினார்.

அப்போது பந்தளம் மன்னர் பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. நடை சாத்திய பின்னர் கோவில் சாவியை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக அய்யப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பெட்டி, பந்தளம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சன்னிதானத்தின் நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பிப்ரவரி மாதம் 5 நாட்களுக்கு நடை திறக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )