கல்கிஸை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் கைது ; பொலிஸாரால் புகைப்படம் வெளியீடு
கல்கிஸையின் சிறிபுர பகுதியில் நேற்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் டுபாயில் பதுங்கியுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த சந்தேக நபர் 47 வயதுடையவர் என்றும், அவர் படோவிட்ட அசங்கவின் குழுவைச் சேர்ந்தவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
கொஸ் மல்லிக்கும் படோவிட்ட அசங்கவிற்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் நடைபெற்று வருகின்றன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்கிஸ்ஸை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது.