பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடியாணை

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடியாணை

பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மேஜிக் மருந்துகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம், 1954 இன் விதிகளை மீறியதாக அவர்கள் மீதான வழக்கு நடந்து வந்தது.

அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டு, நோய்களைக் குணப்படுத்தும் ஆதாரமற்ற கருத்துகளை திவ்யா பார்மசி வெளியிட்டதாக கேரளா முழுவதும் பல கிரிமினல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டன.

அதில் ஒரு வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் தற்போது அவர்களுக்கு பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று (20) நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக பதஞ்சலி ஆயுர்வேத் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து பதஞ்சலி மருந்துகளின் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் பொய்யான விளம்பரங்களின் மூலம் மக்களை தவறாகி வழிநடத்திய அதன் நிறுவனர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

தொடர்ந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து உத்தரவின்படி பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டும் மன்னிப்பு கேட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )