இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் : அவுஸ்திரேலியாவைவிட 518 ஓட்டங்கள் பின்னிலையில்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது வோர்னர் – முரளிதரன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் பகல்போசன இடைவேளைக்கு முன்னர் கடும் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 518 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.
போட்டியின் மூன்றாம் நாளான நேற்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை மேலும் இரண்டு விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் அசத்தி, ஐசிசியின் வளர்ந்துவரும் வீரர் விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் தனது சொந்த மைதானத்தில் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தினேஷ் சந்திமாலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் தினேஷ் சந்திமாலும் குசல் மெண்டிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 136 ஓட்டங்களாக உயர்த்தியபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
மிகத் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிவரும் தினேஷ் சந்திமால் 115 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்று அவுஸ்திரேலியாவை பலப்படுத்தி இருந்தனர்.