மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைகள் குடிப்பது சரியா ? தவறா ?
மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் பருவமடைதலுக்கு பிறகு ஒவ்வொரு 28 நாட்களிலும் வரக்கூடிய நிகழ்வு. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் 28 முதல் 35 நாட்களுக்கு இடையில் வரலாம்.
சிலருக்கு இந்த நாட்களை தாண்டியும் மாதவிடாய் சுழற்சி வரலாம். எல்லா மாதமும் இதேபோல் ஒரே சீராக வரும் என்று சொல்ல முடியாது.
உடலில் ஹார்மோன்களின் சுழற்சிக்கு இடையில் வரக்கூடிய இந்த மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். ஆனால் பலரும் இந்த மாதவிடாய் சுழற்சி அவர்கள் விரும்பும் நேரத்தில் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சுழற்சியை தள்ளி வைக்க நினைக்க கூடாது. ஏனெனில் உடல் இயற்கையாக நடக்கும் இந்த மாற்றத்தை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்தால் அவை பிரச்சனையை உண்டு செய்யலாம்.
தவிர்க்க முடியாத சூழலில் அதாவது ஒரு பெண் அதிக கனமான மாதவிடாய் காலங்களை வலியோடு எதிர்கொள்ளும் போது அவர்கள் பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போது அல்லது அவர்களே விழா நாயகியாக திருமணப்பெண்ணாக இருக்கும் போது இதை தவிர்க்க நினைக்கலாம். அதோடு இவை அடிக்கடி செய்ய வேண்டியிராது என்பதால் இதை செய்வதில் பிரச்சனையில்லை.
மாதவிடாய் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் மருந்துகளை சுயமாக எடுக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுக்க வேண்டும். சரியான முறைகளை பயன்படுத்தி மாதவிடாய் தாமதப்படுத்துவது உண்மையில் பாதுகாப்பான விஷயம் தான்.
ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானவையாக இருக்க வேண்டும். அடிக்கடி விரும்பும் வகையில் மாதவிடாய் காலங்களை மாற்றிக்கொள்வதற்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் தள்ளிப்போட எடுக்கும் மருந்துகளில் செயற்கை புரோஜெஸ்ட்ரான் அல்லது ஈஸ்ட்ரோஜன் உள்ளது. அதிகமாக இதை பயன்படுத்தும் போது வருங்காலத்தில் அந்த பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும்.
உங்கள் உடலில் நீங்கள் செய்யும் மாற்றங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். அதோடு சுயமாக மருந்துகள் எடுப்பதும் உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம்.