
சட்ட விரோதமான முறையில் வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள் மற்றும் மருந்து பொருள்களுடன் மூவர் கைது
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னார் பகுதிக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள், விலங்குகள் மற்றும் மருந்து பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் நேற்று முன்தினம் (04) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புறாக்கள், ஆப்பிரிக்க லவ் பேர்ட்ஸ், பறக்கும் அணில்கள் மற்றும் மருந்து தொகைகளுடன் பயணித்த லொறி ஒன்றுடன், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப்பிரிவு இணைந்து மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பேசாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த லொறி ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன் போது குறித்த லொறியில் 220 புறாக்கள், 20 லவ் பேர்ட்ஸ்கள், 08 பறக்கும் அணில்கள் மற்றும் 30 மருந்து மாத்திரைகள், மருந்துத் திரவங்கள் அடங்கிய 40 போத்தல்கள், லொறி ஆகியவை கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.