
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவில் வைத்து டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.
பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வருகைக்குப் பிறகு இந்த தடை உத்தரவுகள் வெளியாகி உள்ளன. இவை வெளிப்படையாகவே அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
முன்னதாக காசாவை கையகப்படுத்தி பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப திட்டம் கொண்டிருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல. இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.