
காதலிக்கும் போது பல வாக்குறுதிகளை வழங்கலாம் ஆனால் திருமணத்துக்கு பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம்
அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம். 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும். இல்லையேல் விவாகரத்துக்கு செல்ல நேரிடும் .காதலிக்கும் போது காதலிக்கு பல வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (6) நடைப்பெற்ற புலமைச் சொத்து சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் , ”1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் இந்திய வம்சாவழியிலான எமது பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் மீதே முதலில் கைவைக்கப்பட்டது.
பெருந்தோட்ட மக்கள் இந்தியப் பிரஜைகள் என்று குறிப்பிடப்பட்டு அவர்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயற்றப்பட்ட சட்டத்தின் பின்னரே எமது மக்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. சுமார் 30 ஆண்டு காலமாக எமது சமூகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. இதனால் தான் எமது மக்கள் கல்வி, சுகாதாரம், அரச தொழில் உள்ளிட்ட உரிமைகளில் இன்றும் பின்னடைவில் உள்ளனர்.
1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுதந்திரம் பெற்ற போது உலக நாடுகளில் இலங்கை முன்னேற்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் இன்று நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது. ஆகவே நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.
காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளை தவிர்த்து இம்முறை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது. ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.பெருந்தோட்ட மக்கள் இந்த அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.
பெருந்தோட்ட மக்கள் தற்போது ஒருநாள் சம்பளமாக 1700 ரூபாவை பெறுகிறார்கள். அண்மைக்காலமாக வாழ்க்கை செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே தேர்தல் காலத்தில் குறிப்பிட்தை போன்று பெருந்தோட்ட மக்களின் நாட்சம்பளத்தை சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்பதனை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் ஆகியோர் பெருந்தோட்ட பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆகவே பெருந்தோட்ட மக்களின் நலன் தொடர்பில் இவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டு வந்தார். அதனை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார்.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமை மறுப்பு பற்றி பேசினார்.ஆகவே பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதிக்கு புதிதாக கூற எதுவும் இல்லை.ஆகவே கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும்.
ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கும் முழுமையான அதிகாரம் உள்ளது. அத்துடன் சர்வதேசத்தின் ஆதரவும் இந்த அரசாங்கத்துக்கு உண்டு. ஆகவே பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். எமது மக்களின் நலனுக்கான திட்டங்களை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம்.
பெருந்தோட்ட பகுதிகளுக்கு மாடி வீட்டுத் திட்டம் பொருந்தாது. மலையகத்தில் அடிக்கடி மண்சரிவு அனர்த்தம் ஏற்படும். இதனை கருத்திற் கொண்டு தனி வீட்டுத் திட்டம் வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரித்துடன் காணி உரிமை வேண்டும்.
காதலிக்கும் போது காதலிக்கு பல வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம். அரசாங்கம் காலவகாசம் கோருகிறது.
அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம். 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும். இல்லையேல் விவாகரத்துக்கு செல்ல நேரிடும் என்பதை அரசு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.” என தெரிவித்துள்ளார்.