
சாய்ந்தமருதில் உள்ள கிழங்கு சுவையூட்டி கடைகளில் இரவு நேர திடீர் சோதனை !
சுகாதாரமற்ற கிழக்கு பொரியல் உட்பட டேஸ்ட் கடைகள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே . மதன் தலைமையில் சென்ற சுகாதார குழுவினர் நேற்று (07) இரவு திடீர் சோதனைகளை நடாத்தினர்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் உட்பட டேஸ்ட் கிழங்கு பொரியல் கடைகளின் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஸ்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் கடைகள் கிழங்கு பொரியல் தயாரிக்கும் கடைகள் திடீர் பரிசோதனையும் முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டது.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.
