![தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் ! தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் !](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/1739034830-siridharan-2.jpg)
தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் !
நாட்டிலுள்ள சட்டம் யாவருக்கும் சமம் என்றால் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர், இந்த கருத்தினை தாம் இனவாத நோக்கில் முன்வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளையில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகக் கூறி, நாட்டின் சட்டத்துக்கமைவாக அங்கிருந்த காளி கோவிலொன்று அழிக்கப்பட்டது.
அதேசட்டத்தினை தற்போதைய ஆட்சியாளர்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலும் கையாள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், தையிட்டி விகாரை காணி மற்றும் அதனை அண்டியுள்ள காணிகளை மீட்கும் நோக்கில் பூர்வீக காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள போராட்டத்திலும் தாம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.