
மகா கும்பமேளா ; கடும் போக்குவரத்து நெரிசல்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ம் திகதி தொடங்கிய இந்த விழா வருகிற 26-ம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதுவரை சுமார் 43 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி படையெடுத்தனர். இதனால் பிரயாக்ராஜ் நகரை நோக்கி செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 300 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் சரியாகாததால் வழியிலேயே வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் நகரை அடைவதற்கு ஒருநாள் ஆகிறது என சில மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர்.
பிரயாக்ராஜ் நகரை நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருப்பதால் அப்பகுதியில் கூட்டத்தை சமாளிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பிரயாக்ராஜில் உள்ள ரெயில் நிலையம் வரும் 14-ம் திகதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பிரயாக்ராஜ் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து உத்தர பிரதேச அரசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- பிரயாக்ராஜ் நகரில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசல் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது என அதில் கூறியுள்ளார்.