
எங்களுடைய அரசாங்கத்திலே ஊழல் ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
”நாம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் எங்களுடைய அரசாங்கத்திலே ஊழல் ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.”என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.
பசறை விகாரை வீதியில் மக்கள் தொடர்பாடல் காரியாலயம் ஒன்றை நேற்று திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , “மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு ஏதுவான வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இதனை நாம் கருதுகின்றோம். விசேடமாக நம் அனைவருக்கும் தெரியும் இந்த பசறை நகரை பொருத்தமட்டில் ஒரு நிலை குலைந்த அரச அரசியல் சமூக கட்டமைப்பை கொண்ட ஒரு பிரதேசமாக இருக்கின்றது.
உதாரணத்திற்கு பசறை நகரில் வந்து இறங்கும் ஒருவர் தடுமாறி போய் விடுவார் இது பசறை நகரமா என்று. அதனையொட்டி இன்னொரு நகரம் இருக்கின்றது லுணுகலை நகரம் . லுணுகலை நகரமும் அவ்வாறான நிலைமைகளில் தான் இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களுக்கு வாகனங்களுக்கு பெற்றோல் டீஷலை கூட பெற்று கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றது லுணுகலை நகரத்தில்.
பசறை தொகுதி தற்போது எவ்வாறான நிலையில் இருக்கின்றது? நான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இந்த நகரத்தை என்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று பார்வையிட்டோம் ஆய்வும் செய்தோம்.
நீர் நிலைகள் சம்பந்தமாக ஆய்வு செய்து நீர் வடிகாலமைப்பு சபையால் பல கோடி ரூபாய் செலவு செய்து நீர் விநியோக திட்டம் சம்பந்தமாக ஆய்வு செய்த பொழுது, கவலைக்கிடமான நிலமை. பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோக திட்டதில் மக்களுக்கு எவ்விதமான பிரயோசனமும் இல்லை.
அதில் பல கோடி ரூபாய் மோசடி. அது சம்பந்தமாக எதிர்வரும் காலங்களில் ஆய்வு செய்து மோசடி செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கின்றோம். இது மக்களுடைய ஆட்சி .இந்த மக்களுடைய ஆட்சியில் அயோக்கிய அரசியல்வாதிகள் செல்ல பிள்ளைகள் போல் விளையாடுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.
அதற்காக தான் மக்கள் மக்களுக்கான ஆட்சியோடு கரம் கோர்த்து கொண்டு நிற்கின்றோம்.
நாம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் எங்களுடைய அரசாங்கத்திலே ஊழல் ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் . அதற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து எங்களுக்கு ஆட்சியை வழங்கி இருக்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.