திட்டமிட்டபடி மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்போம்

திட்டமிட்டபடி மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்போம்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 16 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 480-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இதனிடையே, காசாவிற்குள் கூடாரங்கள் மற்றும் தங்குமிடங்களை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை எனவும், போர்நிறுத்த விதிமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலையில் தாமதத்தை ஏற்படுத்தப்போவதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது.

அதே சமயம், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவுடன், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் அச்சுறுத்தியது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, வரும் சனிக்கிழமை 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஹமாஸ் அமைப்பின் இந்த அறிவிப்பின் மூலம் காசாவில் போர்நிறுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)