
மினுவங்கொடை மற்றும் கிராண்ட்பாஸ் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
மினுவங்கொடையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மினுவங்கொட பொலிஸ் பிரிவில் கடந்த 07.02.2025 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், கல்லொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த குற்றம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர்.
அதன்படி, நேற்று (13) மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் யகொடமுல்ல மற்றும் தகொன்ன பகுதிகளில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்படி குற்றச் செயல்களுக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை 17 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 மற்றும் 33 வயதுடைய யாகொடமுல்ல மற்றும் தாகொன்ன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கொலை செய்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல உதவியமை, தங்குமிடம் அளித்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் போலியான எண் தகடுகளைப் பயன்படுத்தி சேசிஸ் எண்ணை (Chassis number) அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவருக்கு ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் பஞ்ஞானந்த மாவத்தை பகுதியில் 13 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் கைது செய்து முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நேற்று (13) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை, ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்.
இந்த சந்தேக நபர் 16.10.2024 அன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கார்களின் நெருங்கிய உதவியாளர் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.