
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் நாமல் ராசபக்சவிற்கு சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுதர் ஜூலி சங் இன்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நாமல் எம்.பி உள்ளிட்ட ஏனைய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜூலி சங் இன்று (14) காலை 10 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடலில் பரஸ்பர நலன் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டதோடு, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் நாமல் எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தலையிடாத வெளியுறவுக் கொள்கைக் கொள்கையையும், வரி செலுத்துவோர் நிதியைப் பயன்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மைக்கு அவர் விடுத்த அழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்
மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் வளங்களை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் USAID நிதியைப் பயன்படுத்துவதை விசாரிக்க ஒரு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு குறித்து சுங்கிற்கு விளக்கினோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.