
குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை
புத்தளம் – பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (13) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் – மனைவி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான குறித்த நபர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக முந்தல் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணையை நடத்தியதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.