
அரசியல்வாதிகளின் நீர் மற்றும் மின் கட்டண பட்டியலும் வெளியிடப்படும்
பெற்றோலிய உற்பத்திகள் மூலம் 2023, 2024 காலப்பகுதியில் ரூ. 265.63 பில்லியன் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரூ. 42.04 பில்லியன் இலாபமடைந்துள்ளதாக சபையில் தெரிவித்த அவர், எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , “2023.10.22 ஆம் திகதி முதல் 2024.10.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பெற்றோலிய உற்பத்தி விற்பனையின் மூலம் ரூ. 265.63 பில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இக்காலப்பகுதியில் எரிபொருள் விற்பனையில் ஏதேனும் மோடிகள் இடம்பெற்றுள்ளதாக என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதனை பாராளுமன்றத்துக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எரிபொருள் இறக்குமதியின் போது மேலதிகமாக அறவிடப்படும் 50 சதவித வரியை நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த 50 சதவீத வரி குறைவடையாது என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, 50 சதவீத வரி குறைப்பு இடம்பெறுமா?” என வினவினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. மக்களுக்கு முடியுமான வகையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட தயாசிறி ஜயசேகர எம்.பி, எரிபொருள் இறக்குமதியின் போது மோசடி இடம்பெற்றதாகவும், மோசடியின் ஒரு தொகை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் இன்றும் பழைய விநியோகஸ்தர்களிடமிருந்து தான் எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது.
அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சில தலைவர்கள் சம்பளம் பெறுவதில்லை, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள் என்று அரசாங்கம் பெருமைக்கொண்டது. மின்சார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் முன்னாள் பணிப்பாளர்களை காட்டிலும் அதிகளவில் சம்பளம் பெறுகிறார். அவர் ரூ. 6 இலட்சத்து 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் அது தொடர்பில் அறியவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அறிக்கை பட்டியல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும். அரசியல்வாதிகளின் மின் மற்றும் நீர்கட்டணம் தொடர்பான விபரங்களையும் வெளியிடவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.