
நாமல் ராஜபக்சவை கொலை செய்ய சூழ்ச்சி ?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” நாமலுக்கு கிராமத்துக்கு அல்ல விரைவில் குழிக்குள்தான் செல்லநேரிடும் என்று கடற்றொழில், நீரியல் கடல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான காணொளியும் உள்ளது.
இது மிகவும் பாரதூரமான அறிவிப்பு என்பதுடன், கொலை அச்சுறுத்தலும்கூட என்றே நாம் கருதுகின்றோம். இதனை சாதாரண அறிவிப்பாகவோ அல்லது தவறுதலாக இடம்பெற்ற அறிவிப்பாகவோ கருத முடியாது.
குழிக்குள் செல்ல நேரிடும் என்பதன்மூலம் நாமலின் வாழ்க்கை விரைவில் முடியும் என்ற எச்சரிக்கையையே பிரதி அமைச்சர் வழங்கியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதிக்கு பெரும் சவாலாக அமையவுள்ள நாமல் ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய சூழ்ச்சி அரசாங்க தலையீட்டுடன இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. பிரதி அமைச்சரின் அறிவிப்பு இதனை வெளிப்படுத்துகின்றதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிஐடியினரிடம் நாம் இன்று முறையிடவுள்ளோம். இது தொடர்பில் பிரதி அமைச்சரை அழைத்து வாக்குமூலம் பெறுமாறும் கோருகின்றோம்.
நாட்டில் இடம்பெறும் பாதாள குழு கொலைகளை ராஜபக்சக்கள்மீது திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முற்படுகின்றது. எல்லாவற்றையும் ராஜபக்சக்கள்மீது சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
பாதாள குழுக்களுடன் ராஜபக்சக்களை தொடர்புபடுத்தி, நாமல் ராஜபக்சவை கொல்வதற்குரிய சூழ்ச்சி இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.” என தெரிவித்துள்ளார்.