நாங்கள் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்

நாங்கள் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்

நாடு அநுரவுடன் இருக்கட்டும், எம் ஊர் எங்களுடன் இருக்கட்டும் என்ற சிந்தனையை நாங்கள் மக்களுக்கு முன்வைக்கின்றோம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் , ”எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாங்கள் மக்களுக்கு ஊர் சிந்தனையை முன்வைக்கின்றோம்.

அது என்னவென்றால், இப்பொது மத்திய அரசு தேசிய மக்கள் சக்தியின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தோழர் அநுரவின் கைகளில் நாடு கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களும் தங்களுடைய தேர்தல் சுலோகமாக ‘அநுரவோடு நாடு’ என்று அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும்கூட அநுரவுக்காகவே மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். அந்தத் தேர்தல்கள் முடிவடைந்து விட்டன.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மத்தியில் ஆட்சியில் இருக்கின்றது. அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதற்காக, எமது ஊர் சம்பந்தப்பட்ட விடயங்களை அவர்களிடம் கொடுக்க முடியாது. அது எங்களுடைய கையில் இருக்க வேண்டும்.

நாங்கள் ஒருபோதும் நாட்டின் ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது ஜனாதிபதியாவதற்கோ முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், எங்களுடைய ஊரில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் மற்றவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கக்கூடாது.

ஆகவே, நாடு அநுரவுடன் இருக்கட்டும், எம் ஊர் எங்களுடன் இருக்கட்டும் என்ற சிந்தனையை நாங்கள் மக்களுக்கு முன்வைக்கின்றோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக தனித்துப் போட்டியிட்டு, பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியும். பங்காளிக் கட்சிகளுடன் எமது கட்சியின் தலைவர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)