பழங்குடியின மக்களையும் விட்டு வைக்காத ஆபாச மோகம்
பல ஆண்டுகளாக இணையதள சேவை கிடைக்காமல் இருந்த அமேசான் பழங்குடியின மக்களுக்கு, எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் இணையவசதியை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், தற்போது பழங்குடியின மக்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
தென் அமெரிக்காவில் மிகவும் அடர்த்தியான வனப்பகுதியாக இருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக செல்போன்களையே பார்க்காமல் இருந்தனர். அவர்களுக்கு அண்மையில்தான் 2ஜி சேவையே கிடைத்த நிலையில், இண்டர்நெட் சேவை மட்டும் வழங்கப்படவில்லை
இந் நிலையில், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தான் நடத்தி வரும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும் சாட்டிலைட் மூலம் இணையவசதி வழங்கப்படும் என்றும் அறிவித்து, அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் முதலில் பயனடைந்த அமேசான் காடுகளில் இருக்கும் மார்போஸ் என்ற பழங்குடியினர், தற்போது பிற மக்கள் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் போன்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர்.
இங்குதான் பிரச்சனையே ஆரம்பித்து விட்டதாக, அமேசான் பழங்குடியினத்தைச் சேர்ந்த மூத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, நவீன ஸ்மார்ட்போன்களை வாங்கிய அமேசான் பழங்குடியினத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள், ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டார்களாம்.
இது குறித்து அண்மையில் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டியளித்த அமேசான் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், முதலில் இணைய சேவை கிடைத்தபோது, வீடியோ காலில் பேச முடிந்ததால், மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். ஆனால், தற்போது இணையவசதி கிடைத்ததால், இளைஞர்கள் சோம்பேறியாகி, செல்போன்களிலேயே மூழ்கி கிடப்பதாகவும், பலர் தங்களது கலாச்சாரத்தையே சீரழிக்கும் வகையில், ஆபாச படங்களுக்கு அடிமையாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, தங்கள் இனத்தில் வெளியிடங்களில் வைத்து முத்தம் கொடுத்தால் கூட தவறு என்ற நிலையில், தற்போது குரூப் சாட்டிங் செய்து, அதிலேயே வெளிப்படையாக ஆபாச வீடியோக்களை பகிர்ந்து கொள்வதாகவும், அதை பார்க்கும் இளைஞர்கள், பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் மூத்த பழங்குடியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.