விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி மரணம்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியான சவ்லோஸ் சிலிமா (51) நேற்று (10) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றார். துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமாவுடன் 9 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
லிலொங்வேயில் இருந்து புறப்பட்ட விமானம் மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. இத்தகையச் சூழலில்தான் துணை ஜனாதிபதி சென்ற விமானம் பாதியிலேயே மாயமாகியது.
விமானம் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விலகியதால், விமானம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மலாவி நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா மாயமான விமானத்தைத் தேட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயமாகியுள்ளதால் மலாவி நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மலாவி நாட்டு துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா உட்பட 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மலாவியின் ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா நேற்று (11) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, “திங்கட்கிழமை (10) காணாமல் போன மலாவி துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்” என தெரிவித்துள்ளார்.