ஆண்களுக்கு வழுக்கை விழ என்ன காரணம்
முடி என்பது அழகில் மட்டுமல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. நமது தலையில் சராசரியாக ஒரு இலட்சம் முடிகள் உள்ளன. அதில் 100 முடிகள் உதிர்வது இயற்கையாக நடக்கும்.
முடி என்பது கரோட்டின் என்னும் புரதத்தால் ஆனது. இது ‘பாலிக்கிள்’எனும் முடிக் குழியில் இருந்து வளரக் கூடியது. முடியின் வளர்ச்சியானது பொதுவாக அனாஜன், காட்டாஜன், டீலாஜன் எனும் மூன்று பருவங்களைக் கொண்டது.
இதில் அனாஜன் என்பது முடி வளரும் முதல் பருவமாகும். ஒரு முடியானது சராசரியாக அரை மி.மீ நீளத்துக்கு வளரும். இந்த வளர்ச்சி பருவமானது 3 முதல் 7 வருடங்கள் வரையில் நீடிக்கும். இதை பரம்பரை மரபணுக்கள் தீர்மானிக்கின்றன.
அடுத்தது காட்டாஜன் பருவம். இந்த பருவத்தில் இயற்கையாகவே முடி கொட்ட ஆரம்பிக்கும். இது 2 வாரங்கள் வரையில் நீடிக்கும். அடுத்தது டீலாஜன். இந்த பருவத்தில் முடி ஓய்வெடுக்கும். இது 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும்.
இதுவொரு சுழற்சி முறையாக நடக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருக்கும்பொழுது முடி தொடர்ச்சியாக வளர்ச்சியடையும். அதுவே உதிரும் பருவத்தில் இருந்தால் முடி உதிரும். வழுக்கை விழும்.
வயது ஏற ஏற செல்களின் புத்தாக்கம் தாமதப்படும். அதாவது, 40 வயதுக்கு மேல் முடி வளர்வது குறைந்து, 60 – 75 சதவீதம் முடி உதிர ஆரம்பமாகிவிடும்.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியின் வளர்ச்சியே நின்றுபோய் விடும். எனவே அந்த இடம் வழுக்கையாக மாறிவிடும்.
வழுக்கைக்கு இது மட்டும் காரணம் இல்லை. பொடுகுத் தொல்லை, அதிகப்படியான உடல் உஷ்ணம், விட்டமின் குறைபாடு, உணவு முறை, ஷாம்பூவை நேரடியாக தலைக்கு போடுதல், போன்றவையும் காரணங்களாக உள்ளன.
முடி உதிர்தலை தடுக்க என்ன செய்யலாம்.
பொதுவாகவே முடிக்கு இயற்கை பொருட்கள்தான் சிறந்தது.
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருமே சிறுவயதிலிருந்தே தலைமுடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அந்த வகையில் சோயா பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலுள்ள விட்டடமின் பி2 முடியை வளரவும் கருமையாக்கவும் உதவுவதோடு வழுக்கை வராமலும் தடுக்கும்.
மேலும் வெள்ளரி விதை, வேகவைத்த முட்டை, ஆளி விதை, பூசணி விதை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடித்து வரலாம்.
வெந்தயக் கீரை, பசலை கீரை, போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தானிய வகைகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த உணவு வகைகளை உண்பதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும்.