விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை
பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.
இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் பொலிஸார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.
இந்நிலையில் தற்போது அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று (24) இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று (25) அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
நாளை (26) அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் குறைந்தபட்ச சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அசாஞ்சே ஏற்கனவே லண்டனில் சிறை தண்டனை அனுபவித்ததால், அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், ஜூலியன் அசாஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.