அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும் !

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும் !

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்தார்.

இதற்காக தொழில்நுட்பப் பொதி (பெக்கேஜ்) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இதனைக் குறிப்பிட்டார்.

விவசாயத் துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் பலன்கள் ஏற்கனவே கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் கூறியதாவது:

”பாரம்பரிய விவசாயத்திற்கு அப்பால் சென்று வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது விவசாய அமைச்சின் பொறுப்பாகும். தற்போது இதனை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறோம். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் ஆறு போகங்களில் நெற்பயிர் அறுவடையின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கை அடையத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பெக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் உட்பட அனைத்து நெல் வயல்களும் நெற் பயிற்செய்கைக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
பயிரிடப்பட்ட நிலத்தை ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது நெற்செய்கையின் வெற்றிகரமான பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளதுடன் 800,000 மெற்றிக் தொன் அரிசி அறுவடை கிடைத்துள்ளது.

நெல் விலை தொடர்பில் அமைச்சு என்ற வகையில் தலையிட முடியாது. ஆனால் திறந்த பொருளாதாரத்தில் விலை பராமரிப்பு நியாயமாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. பொருட்களின் விலை உயர்வு ஓரிரு முறை நடந்தாலும், அரசு தலையிட முடியாது. தொடர்ந்து நடந்தால், தலையிட முடியும். தற்போது இரண்டு வகையான அரிசிகளின் கையிருப்பே பேணுப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனைத்து வகை அரிசிகளும் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும்.

மேலும், உலர் வலயத்தில் அதிக கவனம் செலுத்தி, விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில், பயன்படுத்தப்படாத வயல் நிலங்கள் ஏனைய பயிர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது உணவு உற்பத்தியில் சாதகமான முன்னேற்றமாக இருக்கும்.

பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைக்கு அப்பால் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்திற்கு 2500 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி 26 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இளைஞர் விவசாய தொழில்முனைவோர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயம், பெருந்தோட்டக் கைத்தொழில், கால்நடை மற்றும் மீன்பிடித் தொழில் ஆகிய துறைகளில் இளைஞர்களின் தொழில் முனைவோர் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதோடு, புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினால் இளைஞர் சமூகத்தை இந்தத் துறைக்கு ஈர்க்கும் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.

தற்போது விவசாயத் துறையை உள்ளுர் எல்லைக்கு அப்பால் வெளிநாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஸ்ட்ரோபரி, மாம்பழம், அன்னாசி போன்ற பழப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

இது தவிர, விளைச்சல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பயிர் இழப்புகளை மையமாக வைத்து தம்புள்ளையில் குளிரூட்டி நிலையமும் நிறுவப்படவுள்ளது. தகுந்த பயிர்கள் பற்றி விவசாயிகளை அறிவூட்டி வருகிறோம். எமது அமைச்சின் கீழ் இயங்கும் பொருளாதார நிலையங்களின் முகாமைத்துவத்தினால் பயிர் சேதத்தை சுமார் 50% வரை குறைக்க முடிந்துள்ளது. விவசாயிகளின் ஆதரவுடன், பயிர்களை முறையாக சந்தைக்கு விடுவதற்கான முறையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அறுவடைக்குப் பிந்தைய பாதிப்புகளை குறிப்பாக போக்குவரத்தின் போது குறைக்க ரயில்வே சேவையைப் பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே போக்குவரத்து அமைச்சுடன் ஆராய்ந்து வருகிறோம். தற்போதும் பெலியத்தையிலிருந்து பயணிக்கும் ரயில் சேவைகளை ஏனைய மாகாணங்களிலும் சேவையில் ஈடுபடுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கமனி ரணதுங்க,

”இலங்கையில் நுகர்வுக்குத் தேவையான அரிசி, பழங்கள் மற்றும் மரக்கறிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பெரும் போகத்தில் இருந்து நெல் விளைச்சலை அதிகரிக்க, 60,000 ஹெக்டெயார் நிலங்களில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தொழில்நுட்பப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டங்கள் தொடங்கப்படும்.

பரசூட் முறையில் நெற்செய்கையை மேற்கொள்வதுடன் ஒரு ஹெக்டெயாருக்கு 07 மெற்றிக் டொன் நெல் விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் இலக்கை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்துள்ள சோள உற்பத்தியை அதிகரிக்க முறையான உரங்கள் மற்றும் விவசாய இரசாயன நடைமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காய்கறி விளைச்சலைப் பொறுத்தவரை, சில பருவங்களில் அதிகப்படியான உற்பத்தியையும், சில பருவங்களில் பயிர் உற்பத்தியில் பற்றாக்குறையையும் தவிர்க்கும் வகையில், அதிகப்படியான உற்பத்தியின் போது களஞ்சிய வசதிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, குளிர்பதனக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து விவசாயத் திட்டங்கள் மூலம் விவசாயியை தொழில்முயற்சியாளராக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.” என்று தெரிவித்தார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல,

”337 கால்நடை வைத்தியப் பணிமனைகள் மூலம், 16 கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்நாட்டின் கால்நடைத் துறையின் முன்னேற்றத்திற்காக தங்களைத் தீவிரமாக அர்ப்பணித்துள்ளன. முக்கியமாக கோழி மற்றும் பால் பண்ணைகளின் வளர்ச்சிக்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஆறு மாகாணங்களில் 150 பண்ணைகளில் கால்நடை முன்னோடித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், புற்தரைகளை மேம்படுத்தவும், தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஒரு திணைக்களமாக நாம் பங்களித்து வருகின்றோம்.

உற்பத்தித் திறனை அதிகரிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு NVQ 3-4 தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சிக்குப் பிறகு, தேவைப்பட்டால், பால் பண்ணையாளர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கும் செல்லலாம். தற்போது இலங்கையின் நுகர்வுத் தேவையில் 40% உற்பத்தி செய்யும் பாலின் அளவை 2028 ஆம் ஆண்டளவில் 60% வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கால்நடை பண்ணையாளர்களை தொழில்முயற்சியாளர்களாக மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு இதன் மூலம் நேரடி பங்களிப்பை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்று தெரிவித்தார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் (சேவைகள்) சுமித் சந்தன,

”இரண்டு வருடங்களுக்கு முன்னர் உர நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டின் தேவைக்கு உரங்களை கொண்டு வருவதற்கு விவசாய திணைக்களம் உழைத்துள்ளது. விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தனியார் விற்பனையாளர்களிடம் இருந்தும் உரங்களை கொள்வனவு செய்யும் வகையில் சந்தையில் உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நிதி மானியம் மற்றும் உரங்களை இலவசமாக வழங்கும் செயல்முறையின் காரணமாக, விளைச்சலில் வெளிப்படையான அதிகரிப்பைக் காண முடிந்தது. கடந்த பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மானியமாக 11 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த போகத்திற்காக விவசாயிகளுக்கு 5.6 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளை வலுப்படுத்த ” GeoGoviya” செயலியைப் பயன்படுத்தி விவசாயிகளின் அனைத்துத் தரவுகளையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக விவசாயிகளின் தேவைகள் ஆராயப்பட்டு, உடனடியாக சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத் திணைக்களம் மூலம் இதுவரை 19 பசுமைக் குடில்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

விவசாயத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக குளங்கள் புனரமைப்பு மற்றும் களஞ்சிய வசதிகள் உட்பட 1120 திட்டங்களுக்கு 1499 மில்லியன் ரூபாவை கடந்த வருடத்திற்குள் அரசாங்கம் வழங்கியுள்ளது. தற்போது “நிலைபேறான வீட்டுத்தோட்டம்” வேலைத் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு தோட்டத்தில் ஒரு பயிர் இனம் மாத்திரம் பயிரிட எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக ரீதியிலான வருமானத்தையும் ஈட்ட முடியும்.”

மேலதிகச் செயலாளர் (விவசாயத் தொழில்நுட்பம்) ஷிரோமணி எதிரிமான்ன,

”எம்மால் தயாரிக்கப்பட்ட விவசாயக் கொள்கை தற்போது நிதி அமைச்சின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் 10 பிரிவுகளின் கீழ் விவசாய உற்பத்தியை மேற்கொள்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், துறைசார் நிறுவனங்களின் தரவு கட்டமைப்புகளை இணைத்து ஒரு தரவுக் கட்டமைப்பை உருவாக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. இது செயல்திறன் மற்றும் முடிவெடுப்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விதைகள் சட்டம், விலங்குகள் சட்டம், தாவர பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.” என்று தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )