தாத்தாவுக்காக பிரசாரத்தில் களமிறங்கிய பேத்தி

தாத்தாவுக்காக பிரசாரத்தில் களமிறங்கிய பேத்தி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13-ந் திகதி பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.

அப்போது திடீரென ஒரு நபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது வலது காதில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிரம்ப் தனது காதில் பேண்டேஜ் அணிந்தபடி குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்றார்.

இந் நிலையில் மில்வாக்கி நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்டு டிரம்பின் பேத்தி 17 வயதான காய் மேடிசன் டிரம்ப்பை அவரது தந்தை ஜூனியர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து மேடையில் காய் மேடிசன் டிரம்ப் “என்னுடைய தாத்தாவும் சாதாரண தாத்தா போல் தான். எனது பெற்றோருக்கு தெரியாமல் மிட்டாய்களை வாங்கித் தருவார். எனது கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார்.

அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதரால் மற்றொரு மனிதர் மீது இதுபோன்ற தாக்குதலை நிகழ்த்த முடிகிறது என்பதை நினைக்கும்போது மிகுந்த கவலையளிக்கிறது.

எனது தாத்தாவை பலரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து அவர் இன்று வரை நின்று கொண்டிருக்கிறார். அவர் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர். அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா ஒவ்வொரு நாளும் போராடுவார்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )