பங்களாதேஷில் வன்முறை: பலி எண்ணிக்கை 105 ஆக உயர்வு !

பங்களாதேஷில் வன்முறை: பலி எண்ணிக்கை 105 ஆக உயர்வு !

பங்களாதேஷ் அரசாங்கத்தின் பணி ஒதுக்கீடு முறைமைக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

பங்களாதேஷில் மாணவர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதல் தொடரும் நிலையில் நாடு முழுவதும் உச்ச பாதுகாப்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டாக்காவில் இணையதளம் மற்றும் தொலைபேசி
சேவைகள் முடங்கியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை மாலை அரச தொலைக்காட்சியான BTVக்குள் நுழைந்தஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குள்ள தளபாடங்கள் மற்றும் பொருட்களை தகர்த்து தீ வைத்தனர்.

இதனால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு பெரும்பாலான ஊழியர்கள்
கட்டடத்தை விட்டு வெளியேறியதாக பங்களாதேஷ் தொடர்பாடல்
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல நாட்களாக இடபெற்றுவரும் வன்முறைகளில் குறைந்தது 19 பேர்
கொல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் ஷெய்க் ஹசீனா, அமைதிகாக்கும்படி அழைப்பு விடுத்தார்.

பங்களாதேஷ் சுதந்திரப் போரில் பங்கேற்றவர்களின் உறவினர்களுக்கு அரச வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்கை வழங்கும் திட்டத்தை மாற்றக் கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது பாகுபாட்டை ஏற்படுத்தும் முறை என்று குற்றம்சாட்டும் மாணவர்கள் திறமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை தணிக்கும் முயற்சியாக அரசு கடந்த வியாழனன்று தொலைபேசி மற்றும் இணையதள வசதிகளை முடக்கியது.

தொடர்ந்து, பங்களாதேஷத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதனை பயன்படுத்தி சிறைச்சாலையில் இருந்த 100ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் பொலிஸார் உபயோகித்து வருகின்றனர்.

போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )