ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன் ?
ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில்களில் விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும்.
ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் மனம் ஈடுபட வேண்டும் என்பதற்காக இந்த மாதம் திருமணமும் செய்வதில்லை. திருமணம் ஆனவர்களையும் ஒரே வீட்டில் இல்லாமல் பிரித்து வைத்துவிடுவார்கள்.
ஆரோக்கிய பிரச்சினைகள் வரும்
ஆனி கடைசி திகதியில் திருமணம் ஆகியிருந்தால் கூட மறுநாள் ஆடி பிறந்தவுடன் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அதற்கு காராணம் ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பதேயாகும்.
அப்படி கோடையில் குழந்தை பிறந்தால் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரும். அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் இன்றளவும் ஆடி மாதம் முழுவதும் ஏதாவது ஒரு திருவிழா, விசேஷம் என விழா கோலம் பூண்டிருக்கும். இந்த மாதத்தில் கிராம மக்கள் காப்பு கட்டி சில கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள். அதனால்தான் புதிதாக திருமணமான பெண்ணை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த வருடம் ஆடி மாதம் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் 16ஆம் திகதி வரை உள்ளது. ஆனால் ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று.
ஏதேனும் ஒரு விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து நடக்க வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லுகிறது.