இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு !
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் நெடுநாள் மீன்பிடி படகின் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக அந்த கடல் பகுதிகளில் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.
இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் உடனடியாக கரையின் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வௌியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.