இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் : இன்று இலங்கை வரும் இந்திய அணி !

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் : இன்று இலங்கை வரும் இந்திய அணி !

இந்தியாவுக்கு எதிராக எதிர்வரும் சனிக்கிழமை பல்லேகலவில் ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கான இலங்கைக் குழாத்தில் பினுர பெர்னாண்டோ, சமிந்து விக்ரமசிங்க, தினேஷ் சந்திமால் மற்றும் குசல் ஜனித் பெரேரா இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த மாதம் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் இடம்பெற்ற டில்ஷான் மதுஷங்க, அஞ்சலோ மத்தியூஸ், சதீர சமரவிக்ரம மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோருக்கு பதிலே இந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்து கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக எட்டுப் போட் டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலேயே பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்காக ஆடிய டில்ஷான் மதுஷங்க திறமையை வெளிப்படுத்தத் தவறிய நிலையில் ஆறு போட்டிகளில் வெறும் இரண்டு விக்கெட்டுகளையே வீழ்த்தினார்.

இந்நிலையில் மதுஷங்கவுக்கு பதிலாகவே பெர்னாண்டோ டி20 குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துஷ்மன்த சமீர, நுவன் துஷார மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராகவே பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.

இளம் சகலதுறை வீரரான விக்ரம சிங்க லங்கா பிரீமியர் லீக்கில் சிறப்
பாக செயற்பட்டிருந்ததோடு குறிப்பாக துடுப்பாட்டத்தில் சோபித்தார்.

இந்த ஆட்டம் அவர் மீது தேர்வாளர்களின் அவதானம் செல்ல காரணமாகியுள்ளது.

அவர் எட்டுப் போட்டிகளில் 186 ஓட்டங்களை பெற்றதோடு வலது கை மிதவேகப் பந்து வீச்சாளராக ஏழுவிக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இடம்பெறாத சிரேஷ்ட வீரர்களான பெரேரா மற்றும் சந்திமால் இருவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் சோபித்த நிலையிலேயே இலங்கை
அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சந்திமால் கடைசியாக 2022 பெப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியிலேயே ஆடிய இருந்தார் என்பதோடு பெரேரா இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசியாக இலங்கை டி20 அணிக்காக ஆடி இருந்தார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் தத்தமது அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்களாக களமிறங்கிய இவர்கள் முறையே 276 மற்றும் 296 ஓட்டங்களை பெற்றனர்.

இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையிலும் இவர்களால் முன்னிலை பெற முடிந்தது.

லங்கா பீரிமியர் லீக்கில் குறிப்பிடத்தக்க அளவில் சோபித்தபோதும் மத்தியூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலே மற்ற மூத்த வீரர்களில் தேர்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

வனிந்து ஹசரங்க டி20 அணித்தலைமை பதவியில் இருந்து விலகிய
நிலையில் சரித் அசலங்கவிடம் தலைமை பதவி வழங்கப்பட்டிருப்பதோடு வனிந்து அணியில் முக்கிய வீரராக தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

டி20 உலகக் கிண்ணத்தில் போதுமான அளவு சோபிக்காத நிலையிலும் அசலங்கவின் கோரிக்கைக்கு அமைய குசல் மெண்டிஸ் அணியில் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

மறுபுரம் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்ற நிலையில் இந்திய டி20 அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலேயே இலங்கை வரவுள்ளது.

கடைசியாக ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது இலங்கை அணி 2–1 என தொடரை வென்றது.

இந்நிலையில் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய அணி இன்று இலங்கை வரவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )