புங்குடுதீவு அகழ்வு பணிகள் நிறைவு
யாழ்.புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று(02) அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்திலுள்ள தென்பெருந்துறை சதானந்த சிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளின் போது, கடந்த 18ஆம் திகதி மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த இடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பெண்ணொருவரினுடையது என கருதப்படும் முழுமையான எலும்புக்கூடொன்றும் செப்பு நாணயங்களும் அரிசித் துகள்களும் மீட்கப்பட்டுள்ளன.
சான்றுப்பொருட்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன