பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி

பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது. இதற்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை. தொடர்ந்து ஆஸ்துமாவாக இருக்கலாம் என்று கருதி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன் வேறொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது நுரையீரலில் ஏதோ ஒரு சிறிய பொருள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்திய பரிசோதனையில் அந்த பெண்ணின் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரிஜிட் பிராங்கோஸ்கோப்பி என்ற அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அந்த மூக்குத்தியின் சிறிய பாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் நலமாக உள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், ‘கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நான் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பகுதி உடைந்து காணாமல் போனது. அதனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அது தற்போது நுரையீரலில் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது’ என்றார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில், ‘அந்த பெண் தூங்கும் போது மூக்குத்தியின் பாகம் உடைந்து வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்றிருக்கலாம்’ என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )