நாளை முதல் வானிலையில் மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (08) முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் நாளை பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.