வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை

வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை

1971ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படு வந்தது.

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கே அதிக அளவில் அரசு வேலையில் வாய்ப்பு கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அரசு வேலையில் தியாகிகளின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை இரத்து செய்ய வேண்டுமென கூறி கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்தது. இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பூதாகாரமாகி நாடு முழுவதும் வன்முறை பரவியது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, அரசு வேலையில் தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால், கடந்த சில நாட்களாக வங்காளதேசத்தில் இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. பிரதமர் ஹேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி விலகக்கோரி இன்று மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்தபோது வன்முறை வெடித்தது. அதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் அவாமி லீக் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில் மாலை வரை 71 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக வங்காளதேச உள்துறை தெரிவித்துள்ளது. போராட்டம், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )