“ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்“
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.
ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், ஆட்சியை வங்காளதேச இராணுவம் கையில் எடுத்துக்கொண்டது.
இந்நிலையில் பிரதமர் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, அரசியலுக்கு இனி மீண்டும் திரும்பமாட்டார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
“வங்காளதேசத்தில் போராட்டம் வெடித்ததால் 4-ம் திகதியில் இருந்தே பதவி விலகுவது குறித்து ஷேக் ஹசீனா பரிசீலித்து வந்தார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது வங்காளதேசம் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் இன்று ஆசியாவில் எழுச்சி பெறும் புலிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதற்காக கடினமாக உழைத்த தனக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் எழுந்ததால் அவர் ஏமாற்றத்தில் உள்ளார். இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்பமாட்டார்” என்று ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.