மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து வழிபட்டு வரம் பெறும் நாள் இன்று !

மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து வழிபட்டு வரம் பெறும் நாள் இன்று !

மகாலட்சுமி நம் ஒவ்வொரு வீடுகளிலும் எழுந்தருளி, நாம் செய்யும் பூஜை முறைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய நாளே வரலட்சுமி விரத நாளாகும்.

இந்த நாளில் சுமங்கலி பெண்கள் தன்னுடைய கணவரின் நலனுக்காகவும், குடும்பத்தின் சுபிட்சத்துக்காகவும் விரதம் இருந்து, தாலிச்சரடு மாற்றிக் கொண்டு,மகாலட்சுமியை பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமைய இந்த நாளில் வேண்டிக்கொள்வார்கள்.

இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், ஆடி கடைசி வெள்ளியுடன் இணைந்த வருகிறது. இந்த நாளில் எந்த நேரத்தில் மகா லட்சுமியை நம்முடைய வீட்டுக்கு, எந்த முறையில் அழைத்து, எப்படிவழிபட வேண்டும், வரலட்சுமி விரதம் பூஜை முறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த முறையில் மகா லட்சுமியை வழிபட்டால் அடுத்த ஆண்டு வரலட்சுமி விரதத்துக்குள் குடும்பத்தின் செல்வ நிலை உயர்ந்திருக்கும்.

பயபக்தியுடன் வேண்டினால் நாம் கேட்கும் வரங்களை குவிக்கும் அன்னை வரலட்சுமி தேவி, தன்னை வணங்குவோருக்கு நன்மையை அருள்பவர்.

வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம், செல்வம், தைரியம், வெற்றி, கல்வி, பதவி, குழந்தைப்பேறு என அனைத்து விதமான நன்மையையும் கிடைக்கும். ஆண்களுக்கும் பதவி உயர்வு உட்பட பல வரங்கள் வந்துசேரும்.

வரலட்சுமி பூஜை என்றாலே பெண்கள் பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடுவார்கள்.

லட்சுமி பூஜை செய்யும் போது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எப்படி உபசரிக்கிறோமோ அது போல் வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்நலம் உண்டாகும். வரங்களை அள்ளித் தருவதால் மகாலட்சுமி வரலட்சுமியாக அழைக்கப்படுகிறார்.

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாள்தான் வரலட்சுமி விரதம்.

இந்த விரதத்தை திருமணமான சுமங்கலி பெண்களும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமண தடை இருக்காது. திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

திருமணமான பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு விளக்கேற்றி மகாலட்சுமியை வாசலில் இருந்து அழைத்துச் சென்று பல விதமான மந்திரங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.

பூஜைக்கான கலசத்தை மகாலட்சுமி போன்று அலங்காரம் செய்ய வேண்டும். மனை பலகையில் கும்பம் வைத்து கும்பத்தில் உள்ள தேங்காயில் அம்மன் முகம் , கிரீடம் வைக்க வேண்டும். அத்துடன் ஆடை அணிகலன்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

பிறகு வீட்டின் வாசலில் வைத்து மகாலட்சுமியை அந்த கலசத்தில் எழுந்தருளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பூஜைக்கான இடத்தில் அமரச் செய்ய வேண்டும்.

மகாலட்சுமி மனம் குளிர பூஜைகளை செய்ய வேண்டும். நெய் விளக்கு ஏற்றி, வெற்றிலை, பாக்கு, பழம் , நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற உணவுப்பொருட்கள் படைக்க வேண்டும். இதையடுத்து மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.

நோன்பு கயிற்றை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி, லட்சுமி அஷ்டோத்திரம், கனகராதா ஸ்தோத்திரம் சொல்லலாம்.

படிக்க தெரியாதவர்கள் வரலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டால் போதும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் தர வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பூஜைக்கு வைத்திருக்கும் நோன்புச் சரடை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின்போது திருமாங்கல்ய நாணை வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்ள வேண்டும்.

மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம் இன்றைய தினம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரையாகும். பூஜைக்கான உகந்த நேரம் காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல மாலை 6 மணிக்கு மேல் ஆகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )