காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் !

காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் !

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்திய பிளிங்கன், காசாவின் எதிர்காலம் தொடர்பில் இஸ்ரேலுடன் வெளிப்படையாக முரண்பாட்டார்.

காசாவில் போர் வெடித்த பின்னர் கடந்த 10 மாதங்களில் ஒன்பதாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிளிங்கன் கட்டார், எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு பயணமானார். அந்தப் பயணங்களை முடித்துக் கொண்ட
அவர் ‘நேரம் முக்கியமானது’ என்று வலியுறுத்தினார்.

‘கடந்து செல்லும் ஒவ்வொருநாளும், நல்லவர்களுக்கு மிக மோசமான விடயங்கள் நடக்கக் கூடும்’ என்று நேற்று (21) டோஹாவில் இருந்து விமானத்தில் புறப்படும் முன்னர் குறிப்பிட்டார்.

‘போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும், எதிர்வரும் நாட்களில் ஏற்படுத்தப்பட வேண்டும், அதனை அடைவதற்கு நாம் முடியுமான அனைத்தையும் செய்வோம்’ என்று அவர் போர் நிறுத்தம் தொடர்பில் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இடையூறாக இருக்கும் இடைவெளிகளை நிரப்பும்
யோசனைகளை அமெரிக்கா முன்வைத்து வருவதோடு, கெய்ரோவில் இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் எகிப்துடனான எல்லையான பிலடல்பியா தாழ்வார பகுதியின் கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்கவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இந்த எல்லை பகுதியை இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து கைப்பற்றியதோடு இங்குள்ள இரகசிய சுரங்கப்பாதை வழியாக ஆயுதங்கள் காசாவுக்கு கொண்டுவரப்படுவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

காசாவில் இருந்து துருப்புகள் வாபஸ் பெறும் அட்டவணை மற்றும் இடம் தொடர்பில் இஸ்ரேலுடன் ஏற்கனவே இணக்கத்தை எட்டி இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்வதை அமெரிக்கா நிராகரித்திருப்பதாக நெதன்யாகுவின் கருத்துகள் தொடர்பில் பிளிங்கனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் குறிப்பிட்டார்.

நெதன்யாகுவின் வலுவான அறிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு உதவாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

காசா எல்லை பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பது தொடர்பில் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையை செய்து கொண்ட முதல் அரபு நாடான எகிப்து அதிருப்தி அடைந்துள்ளது.

இரு முஸ்லிம் புனிதத் தலங்களின் காவலாராக உள்ள சவூதி அரேபியா உட்பட அரபு உலகம் மற்றும் இஸ்ரேல் இடையே இயல்பு நிலையை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் நெதன்யாகுவை சமரசம் செய்ய பிளிங்கன் முயற்சித்தார்.

இந்நிலையில் பிளிங்கனை சந்தித்த எகிப்து ஜனாதிபதி அப்தல்பத்தா அல் சிசி, ‘போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார்.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் ஹமாஸ் ஆர்வம் காட்டுகின்றபோதும் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த முன்மொழிவில் இஸ்ரேல் முன்வைத்திருக்கும்
புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

எகிப்துடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு காசாவில் ரபா நகர் மீது இஸ்ரேலியப் படை நேற்றுக் காலை சரமாரியாக குண்டுகளை வீசியது.

இதன்போது நான்கு சடலங்களை மீட்டதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரபா நகரின் மேற்கே அல் மவாசியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள அல் காதிப் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டுன் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் பல சுற்றுப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நகரின் தெற்கு பகுதியில் பல இடங்களும் ‘அபாயகரமான போர் வலயம்’ என்பதை காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டுள்ளது.

அங்குள்ளபோராளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் மக்கள் மேற்கு பக்கமாக உடன் வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நாம் எங்கே போவது? எங்கே தான் போவது? ‘ என்று வடக்கு காசாவில் உள்ள காசா நகரில் இருந்து வந்த 55 வயது அபூரக்கன் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அவர் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஐந்து முறை இடம்பெயர்ந்துள்ளார்.

‘அவர்கள் எம்மை நெருங்கி வருகிறார்கள் என்று உணர்கிறேன். அச்சுறுத்தல் பகுதிக்கு சில நூறு மீற்றர் தூரத்தில் நான் இருக்கிறேன். காலை தொடக்கம் டெயிர் அல்
பலாஹ், கான் யூனிஸ் அல்லது நுஸைரத்தில் எஞ்சியுள்ள இடத்தை நான் தேடி வருகிறேன்’ என்று சாட் செயலி வழியாக கருத்துக் கூறியபோதும் அவர் தெரிவித்தார்.

‘துரதிருஷ்டவசமாக இந்தப்போரின் முடிவைக் காண்பதற்கு முன் நாம் இறக்கக்கூடம். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாமே பெய்யானது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தல் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,223 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 92,981 பேர் காயமடைந்துள்ளர்.

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில்தெற்கு லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் மேற்குக்கரையில் ஆட்சி புரியும் பத்தா அமைப்பின் அதிகாரியான கலீல் மகாதா கொல்லப்பட்டுள்ளார்.

மகாதா மற்றும் அவரது சகோதரரான மூத்த பத்தா உறுப்பினர் முனீர் ஆகியோர் லெபனானில் இருந்து ஈரான் புரட்சிக் காவல் படையுடன் இணைந்து செயற்படுவதாகவும் மேற்குக் கரைக்கு பணம் மற்றும் ஆயுதங்களை கடத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )