ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்றும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் தேர்தல்களை கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதுடன் தேர்தல் நடவடிக்கைகளை அவதானித்த பின்னர் குறித்த அமைப்புக்கள் விசேட அறிக்கைகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை அவதானிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.