“சஜித்திற்கு வழங்கும் வாக்கு அநுரவிற்கு வழங்கும் வாக்குகளைப் போன்றதாகும்”

“சஜித்திற்கு வழங்கும் வாக்கு அநுரவிற்கு வழங்கும் வாக்குகளைப் போன்றதாகும்”

‘இயலும் ஸ்ரீலங்கா’ என்ற 5 வருட தேசிய வேலைத்திட்டத்திற்கு இன்று நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும், அந்த வேலைத்திட்டம் வலுவாக அமுல்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் வகையில் செயற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில்   இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:

”ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும் முதற் தடவையாகவே எதிர்கட்சித் தலைவர் ஒருவர் அதனை நிராகரித்தார். இது கின்னஸ் சாதனையாகும். போராட்டத்தின் போது பாராளுமன்றத்தைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டக்காரக்கள் முயன்ற போது அங்கிருந்த அனைவரும் வெளியேறினார்கள். இன்று தலைமைத்துவம் கோரும் அனைவரும் பயந்து ஓடினார்கள்.

நான் நிலைமையை கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் பங்களாதேஷத்தைப் போன்று எம்.பிகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டிருக்கும். பிரதமர் பதவியை ஏற்று என்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு சஜித்திற்கு நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் டளஸை போட்டிக்கு நிறுத்தி அந்த வாய்ப்பையும் சஜித் ஏற்கவில்லை. என்னை ரணில் ராஜபக்‌ஷ என்று விமர்சித்தார்கள். இன்று அவர்கள் விலகிச் சென்றுள்ளனர்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளோம். உலக நாடுகளினதும் அமைப்புகளினதும் ஆதரவு கிடைத்தது. பொருளாதாரத்தை முன்னேற்ற முடிந்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளத்தைப் போன்றே ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவும் அதிகரிக்கப்படுகிறது.

பங்களாதேஷில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டும் தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. எம்.பிகள் கொல்லப்பட்டுள்ளனர். சபாநாயகரை காணவில்லை. பிரதம நீதியரசர் துரத்தப்பட்டுள்ளார். ஆனால் நாம் நிலைமையை சீராக்கி தேர்தல் நடத்துகிறோம். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியாலே அதனை செய்ய முடிந்தது.

மக்கள் ஆணையைப் பெற்று நாம் ஆரம்பித்த திட்டங்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொருளாதாரம் எனும் வீடு உடைந்தது. அதனை கட்டியெழுப்பி வருகிறோம். எனது 5 அம்சத் திட்டத்தை 5 வருட இக்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன்.

மாதம்பே முதலீட்டு வலயத்தை உருவாக்க இருக்கிறோம். சிலாபம் துறைமுகத்தை பிரதான மீன்பிடித்துறைமுகமாக அபிவிருத்தி செய்வோம். மீனவர்களின் உற்பத்திகளை கட்டுநாயக்கவிற்கு அனுப்பலாம். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபத்துடன் இணைக்க இருக்கிறோம். கற்பிட்டியில் துறைமுகம் ஒன்றை உருவாக்கவும் சுற்றுலா வலயம் ஒன்றையும் அமைக்க இருக்கிறோம். இரணவிலயிலும் சுற்றுலா வலயம் ஏற்படுத்தப்படும். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்று இந்தத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

எமது அணியினர் பிரிந்து சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினால் வெல்ல முடியாது. சஜித்திற்கு வழங்கும் வாக்கு அநுரவிற்கு வழங்கும் வாக்குகளைப் போன்றதாகும். எனவே ஐ.தேக. ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து வெற்றிக்காக செயற்பட வேண்டும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )