பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கட்டமைப்பின் சகல அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் விலகி இன்று (15) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பளம் தொடர்பான முரண்பாடுகளை தீர்த்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாமையினால் அத்தியாவசிய சேவைகளில் இருந்தும் விலகுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை,சம்பள  பிரச்சினைக்கான தீர்வைக் கோரி இன்று (15) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.

அரச பொறியியலாளர் சங்கம், ஆயுர்வேதம், கால்நடை வைத்தியம், கல்வி நிர்வாகம், நில அளவை, விவசாயம் உள்ளிட்ட 18 நிறைவேற்று அதிகாரிகள் இந்த தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சுகவீன விடுமுறையை அறிவித்து இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடர்கின்றது.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் சேவையை அரசியலமைப்பில் அங்கீகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )