குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் சில மனித எலும்புகள்

குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் சில மனித எலும்புகள்

தன் காதலியை பார்க்கச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குளியாப்பிட்டிய இளைஞன் சுசித் ஜெயவம்சவின் சடலத்திற்கு அருகில் மற்றுமொரு சடலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹலவத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சடலத்துடன் எலும்புகளை கண்டெடுத்துள்ளதுடன், குறித்த எலும்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என ஹலவத்த புலனாய்வு நிலைய ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

இந்த மனித எலும்புகள் 7 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்டவை எனவும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சுசித் ஜெயவன்சவின் சடலத்திற்கு அருகில் இந்த எலும்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாதம்பே பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹலவத்தை பிரிவு குற்றப்புலனாய்வு ஆய்வு கூடத்தின் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் காட்டுப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

சுசித்தின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் உள்ள மரத்தின் அடியில் எலும்புகளுடன் கூடிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நீண்ட கால்சட்டை அணிந்திருந்தமையும், கால்சட்டையின் கீழ் பகுதி தெரிவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அணிந்திருந்த கால்சட்டையின் பெல்ட்டையும், அவர் அணிந்திருந்ததாக நம்பப்படும் இரண்டு செருப்புகளையும் வேறொரு இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர், எலும்புகளுடன் கூடிய சடலம் ஹலவத்தை பிரதான வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எலும்புகளுடன் சடலத்தை அடையாளம் காண இதுவரை யாரும் வரவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த சடலத்தை காட்டில் வாழும் விலங்குகள் தின்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )