இலங்கையில் இருந்த பல சிறைக்கைதிகள் பாகிஸ்தானுக்கு !
சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைவாக 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகள் பரிமாறும் சட்டத்தின் கீழ், நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 56 பாகிஸ்தான் கைதிகள் நேற்று (06) பாகிஸ்தானுக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி பீ. திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் சிறையிலிருந்த 51 பாகிஸ்தான் ஆண் கைதிகள் மற்றும் 05 பெண் கைதிகள் அடங்கலாக மொத்தம் 56 கைதிகள் ,இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக நாட்டில்
சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 64 பாகிஸ்தான் இராஜதந்திரிகள், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான A 320 விமானம் மூலம் இக்கைதிகளை அழைத்துச்சென்றதாகவும் அவர் கூறினார்.
நீதியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் பாகிஸ்தான் தூதரகம் ஆகியவற்றின் தலையீட்டின் கீழ், இந்த கைதிகளை
பரிமாறிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.