காசா போருக்கு இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவு :பெய்ரூட்டில் தாக்குதல்கள் உக்கிரம் !
காசா போர் வெடித்து இன்றுடன் (7) ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு லெபனானில் தாக்குதல்களை
மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
தெற்கு பெய்ரூட்டில் நேற்று அதிகாலையில் இடம்பெற்ற இஸ்ரேலின் உக்கிரவான் தாக்குதல்களை அடுத்து பாரிம் தீப்பந்து ஒன்று இரவு வானை நோக்கி எழுந்ததோடு பெய்ரூட் வான் எங்கும் புகை பரவியது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்தே காசாவில் போர் வெடித்ததோடு அது மத்திய கிழக்கெங்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஆண்டு நிறைவை ஒட்டி இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓர் ஆண்டாக நீடிக்கும் மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் பயங்கரத் தாக்குதல்களால் காசா பகுதி சின்னபின்ன மாக்கப்பட்டு அங்குள்ள மக்கள் அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காசாவில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 42,000ஐ நெருங்கியுள்ளது. இவர்களில் அதிகப்பெரும்பான்மையானர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
இந்நிலையில் இஸ்ரேலியப்படை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தனது வடக்கு எல்லையில் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு மீது அதிக அவதானத்தைச் செலுத்த
ஆரம்பித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று30க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியதாக லெபனானின் உத்தியோக பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் எண்ணெய் நிரப்பு நிலையம் ஒன்று மற்றும் மருத்துவ விநியோகக் களஞ்சியம் ஒன்றும் இலக்கு வைக்கப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
‘இந்தத் தாக்குதல்கள் பூகம்பம் போல் இருந்தன’ என்று 60 வயதான மஹ்தி செய்தர் என்பவர் தெரிவித்துள்ளார்.
பாரிய வெடிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதி ஒன்றுக்கு மேலாக பெரிய தீப்பந்து ஒன்று எழும் காட்சியை ஏ.எப்.பி.டீவி வெளியிட்டது. அதன் புகை நேற்று சூரியோ தயத்திற்குப் பின்னரும் பரவிக் காணப்பட்டது.
உக்கிர குண்டு வீச்சுக்கு இலக்காகி வரும் தெற்கு புறநகரான சப்ரா பகுதியில் இருந்து மக்கள் தமது உடைமைகளைச் சுமந்தபடி கால்நடையாகவும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களிலும் வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து கடும் பதற்ற சூழல் இருந்து வருவதோடு இஸ்ரேலை நோக்கி 30 ரொக்கெட் குண்டுகள் வந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்றுத் தெரிவித்தது.
தெற்கு லெபனானின் பிளைதா நகரின் கல்லத் ஷுஹைப்பகுதியை நோக்கி ஊடுருவுவதற்கு முயன்ற இஸ்ரேலியப் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.
நள்ளிரவுக்குப் பின்னர் சிறிது நேரத்தில் மெனாரா எல்லையில் ‘உயிரிழந்த மற்றும் காயமடைந்த படையினரை’ வெளியேற்றும்போது இஸ்ரேலிய துருப்புகள் மீது போராளிகள் ரொக்கெட் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.
இஸ்ரேலிய இராணுவ முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ட்ரோன்களையும் அனுப்பியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.
லெபனானில் தொடரும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் 2000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் கணிசமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். அதே போன்று ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் தற்காலிக முகாம்களிலும் இட வசதிகள் தீர்ந்து வருவதாக ஐ.நா நிறுவனம்
தெரிவித்துள்ளது.
தவிர, 200,000க்கும் அதிகமான மக்கள் அண்டை நாடான சிரியாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
காசா போருக்கு இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டனியேல் ஹகரி நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றும்போது கூறியதாவது, ‘தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதால் இந்த தினத்தை ஒட்டி படைகளை அதிகரித்து தயாராகி வருகிறோம்’ என்றார்.
எனினும் காசாவில் ஹமாஸ் படையை முறியடிப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் இஸ்ரேலிய இராணுவம் அங்கும் தொடர்ந்து தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிவாசல் மற்றும் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேலியப்படை ‘இரு கொடிய படுகொலைகளை மேற்கொண்டதாக’ காசாவின் அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் சுமார் 93 பேர் காயமடைந்ததாக அந்த அலுவலகம் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளது.
அல் அக்ஸா பள்ளிவாசல் என்று அடையாளம் காணப்பட்ட கட்டடம் மற்றும் இபுனு ருஷ்த் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த இரு கட்டடங்களினும் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றருந்தாக ஊடக அலவலகம் கூறியது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 256 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார
அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்டபலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,870 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 97,166 பேர் காயமடைந்துள்ளது.
மறுபுறம் வடக்கு காசாவில் ஜபலியான அகதி முகாமை இஸ்ரேலியப் படை சுற்றிவளைத்திருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு இரவு முழுவதும் இடம்பெற்ற கடும் தாக்குதலில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை வடக்கு காசாவின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக புதிய வெளியேற்ற உத்தரவு ஒன்றைப்பிறப்பித்திருக்கும் இஸ்ரேல் இராணுவம் அங்குள்ள மக்களை ஏற்கனவே மக்கள் நிரம்பி வழியும் அல் மவாசியிலுள்ள ‘மனிதாபிமான வலயத்திற்கு’ செல்லுபடி உத்தரவிட்டுள்ளது.
காசா போர் தற்போது பிராந்தியத்தில் முழு அளவில் போர் ஒன்று வெடிக்கு அச்சுறுத்தலை அதிகரித்திருப்பதோடு இஸ்ரேல் மீது கடந்தவாரம் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தாக்குதலுக்கு பதில் கொடுக்க இராணுவம் தயாராகி வருவதாக பெயரை வெளியிடாத இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி
நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் தொடக்கம் ஈரான் இரு முறை நூற்றுக் கணக்கான ஏவுகணைகளை வீசி இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்டினார்.
‘தன்னை தற்காத்துக் கொள்ளும் கடமை மற்றும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதோடு இந்தத் தாக்குதல்களுக்கு பதில் கொடுப்போம்’ என்று அவர் நேற்று வெளியிட்ட
அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டார்.
இதேவேளை ஈரானில் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்று அஞ்சப்படும் கதர்ஜ் தீவில் உள்ள ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் நிலையத்திற்கு அந்நாட்டின் எண்ணெய் வள அமைச்சர் மொஹசன் பக்னஜாத் பயணமாகியுள்ளார்.
இந்த எண்ணெய் நிலையம் 23 மில்லியனுக்கும் அதிகமான மசகு எண்ணெய் பீப்பாய்களை களஞ்சயப்படுத்தக்கூடிய வசதி கொண்டதாகும்.