சுயநலன்களுக்காக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்
சுயநலன்களுக்காக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச்சாத்தியமான அரசியலை ஈ.பி.டி.பி. கட்சி மாத்திரமே இணக்க அரசியல் ஊடாக முன்னடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வட்டார உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் முல்லைத்தீவு கட்சி அலுலவகத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஈ.பி.டி பி. தவிர்ந்ந தமிழ்த் தரப்புக்கள் சுயநலன்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் கையாள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், “ தேர்ததல் வெற்றிகளுக்காக கூட்டுச்சேருகின்ற கட்சிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி கூட்டணிகளை அமைப்பதாக தெரிவிக்கின்றனர்.
அண்மையில், ஒரு கட்சி கூறியுள்ளது கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட கட்சிகளைத் தாங்கள் இணைத்து வைத்திருந்ததாகவும் தற்போது வெளியேற்றி விட்டதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் கூட்டமைப்புக்கள் அமைக்கப்பட முற்பட்ட காலத்திற்குரியவை, இணைந்து இருக்கின்றபோது இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தெரியாமலா இருந்தீர்கள் என்று சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
அதேபோன்று இன்னொரு தரப்பு சொல்கிறது ஒற்றையாட்சியை ஏற்கமாட்டார்களாம்,
மாகாணசபையை ஏற்கமாட்டார்களாம். ஆனால், மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் போட்டியிடுவார்களாம்.
இவ்வாறானவர்களிடம் உண்மை இல்லை. மக்களை ஏமாற்றுகின்றார்கள். ஈ.பி.டி.பி. மாத்திரமே 90 ஆம் ஆண்டிலிருந்து வெளிப்படையாக மக்களுக்கு சாத்தியமான வழியை
வெளிப்படையாக கூறிவருகின்றது. இணக்க அரசியல் ஊடாக எமது வழிமுறையில் கணிசமான விடயங்களை செய்திருக்கின்றோம்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கி 4 அல்லது 5 ஆசனங்களை தரும்பட்சத்தில், குறித்த மக்கள் ஆணையை பயன்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.