யாழ் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க மறுக்கும் கோட்டா
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டில் காணாம லாக்கப்பட்ட வழக்கில் சாட்சியாளராகப் பெயரிடப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர, நாட்டின் வேறெந்த நீதிமன்றத்திலும் சாட்சி வழங்கமுடியுமென அறிவித்துள்ளார்.
அவரது சட்டத்தரணிகள் இதனை நேற்று உயர்நீதிமன்றத்திடம் அறியப்படுத்தினர்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் மேற்படி சம்பவ வழக்கில் சாட்சியைப் பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை அழைக்க முடியாதென ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக காணாமலாக்கப்பட்டவர் களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கோட்டாபயவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா இதனை நீதிமன்றத்தில் அறிவித்தார்.
தனது கட்சிக்காரர் யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு வரமுடியாதென்றும் நாட்டின் வேறெந்த நீதிமன்றுக்கும் அவரால் சமுகமளிக்க முடியுமென்றும் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குறிப்பிட்டார். மனுதாரர் சார்பில் இதற்கு எந்த எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.