பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஏ.என்.ஜே. டி அல்விஸ் மற்றும் ஐ.எம். இமாம் ஆகிய இரு அறிக்கைகள் எங்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அல்விஸ் அறிக்கை மாத்திரமே கிடைத்தது.
செனல் 4 நிறுவனம் தொடர்பான குழு அறிக்கை கிடைக்கவில்லை. எது எவ்வாறாக இருந்தாலும் இவ்விரு விசாரணைகளும் இரகசியமான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்டவை என்பதால் இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறும் வரை நாங்கள் மெளனிக்க போவதில்லை” என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரகசிய அறிக்கை என்று குறிப்பிட்டே எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், உதய கம்மன்பில அரங்கேற்றிய நாடகத்தை தொடர்ந்து அதன் இரகசியம் உடைக்கப்பட்டுள்ளது.
கவனத்தை திசைத் திருப்புவதற்காகவே தேர்தலுக்கு முன்னர் கத்தோலிக்க ஆயர்கள் சபையிடம் பொய்கூறி அவசரமாக இந்த அல்விஸ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ஏ.என்.ஜே.டி.அல்விஸ் அறிக்கை நேரடியாக கத்தோலிக்க ஆயர்கள் சபையின் தலைவர் எரல் அண்டனி பெரேரா ஆண்டகைக்கே அனுப்பி வைக்கப்பட்டது. முதலாவது அறிக்கை செப்டெம்பர் 17 ஆம் திகதி அதாவது தேர்தலுக்கு மூன்று தினங்கள் இருக்கும்போது எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் இந்த அறிக்கை இரகசியமானது என்று கடிதத்தினூடாக அறிவித்திருந்தார்கள். இரகசிய அறிக்கையாக அதனை அவர்கள் அனுப்பி வைத்திருந்ததால் அதனை வெளியிடுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கவில்லை. இந்த அறிக்கையில் இரகசியத் தன்மை எதுவும் இல்லை என்று இதுவரையில் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இருந்தபோதும், உதய கம்மன்பில அரங்கேற்றிய நாடகத்தை தொடர்ந்து அதன் இரகசியத் தன்மை உடைக்கப்பட்டுள்ளது.
அதனால் தற்போது இந்த அறிக்கை தொடர்பில் எங்களால் பேச முடியுமென்று நாங்கள் நம்புகிறோம். அதனால் இது மூடிமறைக்க வேண்டிய விடயமில்லை என்றும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் விடயங்கள் எங்களுக்கு அவசியமற்றது. எங்களுக்கான நீதியையே கோருகிறோம். அதற்கு சுதந்திரமான சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்.
அவ்வாறிருக்கையில், ஜனாதிபதியின் நியமனங்கள் தொடர்பில் கருத்து வெளியிட எங்களுக்கு உரிமை இல்லை. விசாரணைகள் இடம்பெறுவதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பலமுறை ஒவ்வொரு ஜனாதிபதிகளுக்கும் எங்களின் விடயங்களையும் சந்தேகிக்கும் விடயங்களையும் கடிதத்தினூடாக அறிவித்திருக்கிறோம். ஆனால் அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
ஒன்றரை வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் அதில் சில குறைபாடுகள் இருக்கின்றன.
பரிந்துரைகள் மாத்திரமே எங்களுக்கு கிடைத்தன. சில காலங்களின் பின்னரே மேலும் சில உள்ளடக்கங்கள் கிடைத்தன. ஆனால், அரச இரகசியம் தொடர்பான பகுதி எங்களுக்கு கிடைக்கவில்லை. நீதியரசர் விஜித் மலல்கொடவின் அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தது.
எங்களுக்கு கிடைத்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதனை செயற்படுத்தாதவர்களின் பங்களிப்பு தொடர்பிலான யோசனைகள் மாத்திரமே அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதேபோன்று, செனல் 4 நிறுவனத்தின் ஆவணப்படம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் அறிக்கை இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. எங்களுக்கும் இன்னும் அந்த அறிக்கை கிடைக்கவில்லை.
கத்தோலிக்க ஆயர்கள் சபைக்கு பொய்கூறி தவறான பாதயை காண்பிப்பதற்காகவே இந்தக் குழுக்களை பயன்படுத்தி கொள்வதற்கே தேர்தலுக்கு முன்னர் இந்த அறிக்கைகளை அவசரமாக தயாரித்து கொடுப்பதற்கான அடிப்படைக் காரணமாக இருக்குமென நாங்கள் கருதுகிறோம்.
இரண்டாவது குழுவின் அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. செனல் 4 நிறுவனத்தின் ஆவணப்படம் தொடர்பில் சரியான சாட்சிகளை விசாரணை செய்தார்களா என்பது எங்களுக்கு தெரியாது. அதுதொடர்பான அறிக்கையொன்றும் எங்களுக்கு கிடைக்கவும் இல்லை.
செனல் 4 வின் ஆவணப்படம் மிகவும் அவசியமானது. அந்த ஆவணப்படத்தில் நபரொருவர், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்களினூடாக பண உதவி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். ஆகவே, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் இதுதொடர்பில் கட்டாயம் விசாரணை செய்தே ஆக வேண்டும்.
இவ்விரு குழுக்களின் கூட்டங்களில் எங்களின் சட்டத்தரணிகளுக்கோ அல்லது வேறு சட்டத்தரணிகளுக்கோ கேள்வி கேட்பதற்கு இடமளிக்கப்படவில்லை.
இவ்விரு விசாரணைகளும் இரகசியமான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரகசிய விசாரணைகள் இரண்டும் அரசியல் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளாகவே நாங்கள் கொள்கிறோம்.
அதனால், இவ்விரு அறிக்கைகளையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான முறையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தால் இன்னும் காலம் செலவாகியிருக்கும். ஆனால், மேலும் கீழுமாகவே இவ்விரு அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
எங்களுக்கு கிடைத்துள்ள அல்விஸ் அறிக்கையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை மீளவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த பரிந்துரைகளை மீண்டும் அறிவிப்பதற்கு எதற்காக தனியான குழு நியமிக்க வேண்டும். அதற்கு ஒரு இணைப்பை பொருத்தும் வகையிலேயே ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கை ஆழ்ந்து, வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட அறிக்கையும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் அறிக்கைகளை பெற்றுக்கொடுத்தோம் என்பதற்காகவே இந்த அறிக்கையை முன்வைத்திருக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படைவாதத்துக்கு இவர்கள் ஏழு பேரையும் உட்படுத்தியவர்கள் யார் என்பதை முதலில் தேடிப்பார்க்க வேண்டும். இரண்டாவது இந்த விடயம் தொடர்பில் அறிந்தும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய விசாரணைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கு நிதி, வெடிபொருட்கள், பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். இதுதொடர்பில் எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
ஆனால் அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு விசாரணைகள் இடம்பெற்றால் மாத்திரமே சரியான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் நாங்கள் அமைதி காக்க மாட்டோம். அதுவரையில் குரல் கொடுப்போம் என்றார்.